தோழர். ஜீவானந்தம்
(‘மார்க்ஸின் மூலதனம் வாசிப்புக்கு ஒரு
திறவுகோல்’ நூலின் ஆசிரியர்)
”தாஸ்
கேபிடல்” என்ற பெயரில் ஜெர்மன் மொழியில் முதன் முதலில் வெளிவந்த மார்க்ஸின் மூலதன நூல்
3 தொகுதிகளைக் கொண்டது. அதன் முதல் தொகுதி 1867-ல் வெளிவந்தது. மீதி இரண்டு தொகுதிகளும்
மார்க்சின் மறைவிற்குப்பின் அவருடைய இணைபிரியா நண்பரான ஃபிரடரிக் ஏங்கல்ஸால் வெளியிடப்பட்டது.
இன்று உலக முழுவதும் பல்வேறு மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு உழைக்கும் வர்க்கத்தின்
பைபிளாக உலக அரங்கில் ஒளி காட்டி வருகிறது. 18-ம் நூற்றாண்டில் முதலாளித்துவம் இங்கிலாந்தில்
வெற்றிநடைபோட்டு வந்த காலச்சூழலில் அதற்கு ஆதரவான பொருளாதார வல்லுநர்கள் தோன்றினர்.
அவர்களில் முக்கியமானவர்கள் ஆதாம் ஸ்மித் ( 1723-1790), டேவிட் ரிக்கார்டோ (1772-1823), ஜீன் பாப்திஸ்ட் ஸே (1767-1832), தாமஸ்
ராபர்ட் மால்தூஸ் (1766-1834), ஜான் ஸ்டூவர்ட் மில் (1806-1873) ஆகியோர் ஆவர். இவர்களை
முதலாளித்துவ வர்க்கம் தொல்சீர் பொருளாதாரவாதிகள் (Classical Economists) என்று இன்றுவரை
அழைத்து வருகின்றனர்.
தொல்சீர்
பொருளாதாரவாதிகள் போதித்த, எழுதிய பொருளாதாரக் கோட்பாடுகளை அரசியல் பொருளாதாரம் என்று
அழைக்கிறோம். ஏனென்றால் பொருளாதாரம் என்பதே வர்க்க சார்புடையதுதான். வரலாற்றில் ஒரு
குறிப்பிட்ட காலகட்டத்தில் நிலவுகிற உற்பத்திமுறைதான் சமூக அமைப்பிற்கு அடித்தளம்.
சமுதாய உற்பத்திமுறையில் ஏற்படக்கூடிய மாற்றம் சமூக மாற்றத்திற்கு இட்டுச்செல்கிறது.
இதுதான் மனிதகுலத்தின் வரலாறு. இத்தகைய சமூக மாற்றம் அரசியல் அமைப்பிலும் மாற்றத்தைக்
கொண்டுவந்து சேர்க்கிறது. எனவேதான் இத்தகைய பொருளாதாரத்தை அரசியல் பொருளாதாரம் என்று
அழைக்கிறோம்.
சரக்கு
உற்பத்தியில் மதிப்பு எப்படி படைக்கப்படுகிறது? அந்த மதிப்பின் படைப்பாளி யார்? மதிப்பின்
பெருக்கம் எப்படி மூலதனமாக மாறுகிறது? யார் கையில் சேருகிறது? மூலதனப் பெருக்கம் எத்தகைய
நெருக்கடியைச் சந்திக்கிறது? இதற்குத் தீர்வு என்ன? இத்தகைய பல்வேறுபட்ட புதிர்களுக்கான
புரிதலை மூலதன நூல் மூலம் கார்ல் மார்க்ஸ் அரசியல் பொருளாதார விமர்சனத்திற்கான பங்களிப்பு
என்ற முறையில் முன்வைக்கிறார்.
மார்க்ஸ் இன்றும் தேவைப்படுகிறார்!
மார்க்ஸியப்
பொருளாதாரம் காலாவதியாகிவிட்டது என்றும், அது இந்த காலகட்டத்திற்குப் பொருந்தாது என்றும்
மார்க்ஸிய விரோதிகள் தொடர்ந்து வாதிட்டு வருகின்றனர். 19-ம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் நிலவிய சூழ்நிலைகளை வைத்து எழுதப்பட்ட நூல் என்றும்,
இன்று உலக அரங்கில் முதலாளித்துவம் பல சாதனைகளைப் புரிந்து வருகிறது என்றும், மார்க்ஸின்
கோட்பாடுகள் விஞ்ஞான வளர்ச்சிக்கு எதிரான மாறாநிலைத் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது
என்றும் மார்க்ஸிய திரிபுவாதிகளும் உரக்கச் சத்தம் போடுகின்றனர். ஆனால் அந்த வாதங்களையெல்லாம்
பொய்யாக்கி மார்க்ஸின் மூலதனம் இன்றைய காலகட்டத்திற்கும்
பொருந்தும் நூலாக விளங்குகிறது. 2008-ல் அமெரிக்காவில் வீட்டு அடமானக்கடன் நெருக்கடியில்
பல்வேறு வங்கிகள் திவாலாகிப் போயின. இதனைத் தொடர்ந்து ஐரோப்பிய நாடுகளும் சிக்கலில்
மாட்டிக் கொண்டன. அமெரிக்க அரசு தலையிட்டு வங்கிகளைக் காப்பற்ற வேண்டிய நிர்ப்பந்த
நிலை உருவாகியது. உபரி உற்பத்தியின் விளைவு பொருளாதார நெருக்கடியைக் கொண்டுவரும் என்பதற்கான
அண்மைய ஆதாரமாக இதனை எடுத்துக் கொள்ளலாம். நெருக்கடி ஏற்பட்ட சில மாதங்களிலேயே ஜெர்மனி
நாட்டில் பெர்லின் நகரில் ”மூலதனம்” நூலின்
அனைத்துப் பிரதிகளும் விற்றுத் தீர்ந்து விட்டன. மார்க்ஸின் மூலதன நூலை வெளியிட்டு
வரும் ஜெர்மன் பதிப்பாளர் ஜோர்ன் க்ஷட்ரம் கூறுவதாவது. “2004-ம் ஆண்டுவரை மூலதன நூல்
ஆண்டுக்கு 100 பிரதிகளுக்கும் குறைவாகவே விற்று வந்தது. 2008-ம் ஆண்டில் கடந்த 10 மாதத்தில்
2500 பிரதிகளுக்கும் அதிகமாக விற்றுள்ளது. முதலாளித்துவம் ஏன் வெற்றிபெறவில்லை என்பதைப்பற்றி அறிந்துகொள்ள மக்கள் ஆர்வமாக உள்ளதையே
இது காட்டுகிறது”
– ( இண்டர்பிரஸ் சர்வீஸ்
07-11-2008).
உலகளாவிய
முதலாளித்துவ நெருக்கடியை ஊன்றிக் கவனித்து வரும் போப் ஆண்டவர் (போப் பெனடிக்ட்)
2013 ஜனவரி-1 அன்று உலக மக்களுக்கு வாடிகனில் இருந்து ஆற்றிய உரையின் சில பகுதிகள்
கீழே கொடுக்கப்பட்டுள்ளன. “இன்று உலகம் கட்டுக்கடங்காத முதலாளித்துவம், பயங்காரவாதம்
மற்றும் குற்றப் பெருக்கத்தால் அவதியுறுகிறது…. உலக முதலாளித்துவம் வலுவிழந்த கீழ்த்தட்டு
மக்களைக் காப்பாற்றவில்லை என்பதுதான் உண்மை”. முதலாளித்துவ உலகின் சீர்கேட்டிற்கு இதைவிட
சான்று தேவையில்லை. எனவேதான் முதலாளித்துவ உற்பத்திமுறையை ஊன்றிக் கவனித்து வந்த மார்க்ஸ்,
முதலாளித்துவம் சகல துறைகளிலும் வளர்ச்சியைக் கொண்டுவரும் அதே வேளையில் பெருவாரியான
உழைக்கும் மக்களைத் தீராத் துன்பத்திற்கு ஆளாக்கும் என்றும், சகலவிதமான சமுதாயக் குற்றங்களைத்
தோற்றுவிக்கும் என்றும், ஏற்றத் தாழ்வான சமுதாயத்தை உருவாக்கும் என்பதையும் உரத்த குரலில்
உலகிற்கு எடுத்துரைக்கிறார். வர்க்கப்பகைமையை உட்கொண்ட முதலாளித்துவ அமைப்பு ஒரு
குறிப்பிட்ட கால கட்டத்தில் மாற்றத்திற்கு உட்படும் என்றும், அது வரலாற்றில் தோன்றி மறையும் ஒரு காலகட்டம்தான், என்றைக்கும்
நிலைத்து நிற்கும் சாசுவத விதி அல்ல என்று தனது மூலதன நூலில் எடுத்துரைக்கிறார். முதலாளித்துவம்
மனிதகுல விடுதலைக்கு ஒரு போதும் தீர்வாக அமையாது. வர்க்க முரண்பாடுகளுக்குத் தீர்வை
முதலாளித்துவ உற்பத்தி முறைக்குள் தேடுவது தவறானது.
உழைப்பின் மதிப்புக் கோட்பாடு:-
மனித
உழைப்புத்தான் மதிப்பைப் படைக்கிறது என்பதை ஆதாம் ஸ்மித் ஒத்துக்கொள்கிறார். ஆனால் அந்த உழைப்பு மூலப்பொருள்களுடன்
சேர்வதால்தான் மதிப்பு படைக்கப்படுகிறது என்றும், அதுதான் நாடுகளின் செல்வத் திரட்டலுக்கு
ஆதாரம் என்றும், இத்தகைய செல்வத் திரட்டல் வட்டி, வாடகை, லாபம் மற்றும் கூலியாகப் பங்கிடப்படுகிறது
என்கிற கருத்தை தன்னுடைய “நாடுகளின் செல்வம்” ( Wealth of Nations) என்ற நூலில் விவாதிக்கிறார். மற்றொரு அரசியல் பொருளாதாரவாதியான
ரோட்பெட்டர்ஸ் என்பவரும் இதே கருத்தை ஆதரிக்கிறார். ஆனால் டேவிட் ரிக்கார்டோ இவர்களிடமிருந்து
சிறிது மாறுபடுகிறார். உழைப்புத்தான் மதிப்பின் அளவையாகும். உழைப்பாளியின் உபரி உழைப்புத்தான் முதலாளிக்கு லாபமாகக் கிடைக்கிறது
என்று வாதிடுகிறார். ஆனாலும் ரிக்கார்டோ உணரத்
தவறிய உழைப்புக்கும், உழைப்புச் சக்திக்கும் (கூலி) உள்ள வித்தியாசத்தை மார்க்ஸ் தீர்த்து
வைக்கிறார். சந்தையில் நிலவும் தேவை மற்றும் அளிப்பு விதிதான் சரக்குகளின் விலையை
(மதிப்பை) நிர்ணயிக்கிறது என்றும் சில பொருளாதாரவாதிகள் வாதிடுகின்றனர். இதையும் மார்க்ஸ்
தன் ஆய்வுக்கு உட்படுத்துகிறார். தேவையும் அளிப்பும் சமமாக இருக்கும்போது சரக்குகளின்
விலையை நிர்ணயிப்பது எது என்ற கேள்வியை எழுப்பி இவர்களின் தப்பான அபிப்ராயாங்களை உடைத்து
எறிகிறார்.
சரக்குகளின்
முடிவற்ற சுற்றோட்டமானது, சரக்குகளுக்கிடையில் ஒரு இணக்கமான வழங்கல்-தேவை என்ற சமநிலையை உருவாக்கும் என்றும் சில பொருளாதார
வல்லுநர்கள் வாதிட்டனர். அவர்களின் முதன்மையானவர் ‘ஸே”. இதன்மூலம் முதலாளித்துவம் சமுதாயத்திற்குத்
தேவையான பொருள்களை மட்டும் உற்பத்தி செய்வது போன்றும், சமுதாய நலன்தான் அதன் பிரதான
பணி என்பது போன்றும் பொய்யான தோற்றத்தை ஏற்படுத்த முயன்றனர். ஆனால் வழங்கலுக்கும் தேவைக்கும் சமநிலை என்பதை மார்ஸ்
திட்டவட்டமாக மறுக்கிறார். தொல்சீர் பொருளாதாரவாதிகள் எதைத் தீர்வு என்று கருதினார்களோ
அதுதான் பிரச்சினை என்று மார்க்ஸ் தனது நூலில் விளக்கியுள்ளார். மனிதகுல வரலாற்றையும்,
உற்பத்தி முறைகளையும், அதன் தொடர்பான பொருளாதார உறவுகளையும், உற்பத்தி உறவுகளையும்
ஆய்வுக்குட்படுத்திய மார்க்ஸ், தொல்சீர் பொருளாதாரவாதிகளின் மதிப்பு குறித்த கோட்பாட்டை
விமர்சனத்திற்கு உட்படுத்துகிறார். அந்த விமர்சன வழிப்பட்ட கருத்தாக்கம்தான் மார்க்ஸின்
மூலதனம் என்னும் நூல்.
எவ்வகைப்பட்ட
உழைப்பானது மதிப்பை உற்பத்தி செய்கிறது? ஏன் உற்பத்தி செய்கிறது? எப்படி உற்பத்தி செய்கிறது?
என்பதை முதன்முதலின் ஆராய்ந்தவர் மார்க்ஸ் ஒருவரே. முதலாளித்துவப் பொருளுற்பத்தி அனைத்தையும்
புரிந்து கொள்வதற்கான திறவுகோலை மார்க்ஸ் பாட்டாளி வர்க்கத்திற்கு அளிக்கிறார். சரக்கின்
மதிப்பானது முற்றிலும் சமூகமயமாக்கப்பட்ட இறுகிய மனித உழைபே தவிர வேறு எதுவுமல்ல என்ற
உண்மையைத் தெளிவுபடுத்துகிறார். சரக்குகளின் மதிப்பை ஆராய்ந்த மார்க்ஸ், பணத்துடன்
சரக்குகளுக்கு உள்ள உறவினை ஆராய்ந்தார். மதிப்புடையவையாக இருத்தல் சரக்குகளின் உள்ளார்ந்த
தன்மையாகும் என்பதால், சரக்குகளும் சரக்குப் பரிவர்த்தனையும் எப்படி பணத்துக்கும் சரக்குகளுக்குமிடையில்
முரண் நிலையை உண்டாக்குகின்றன என்று மார்க்ஸ் தன் நூலில் விளக்குகிறார். இதன் மூலம்
மூலதன நூலில் மார்க்ஸ் வகுத்தளித்த பணத் தத்துவம் பணத்தைப்பற்றிய முழுமையான முதலாளித்துவத்
தத்துவம் ஆகும். மேலும் மூலதனத்தை மாறா-மூலதனமாகவும் மாறும் மூலதனமாகவும் வேறுபடுத்திக் காட்டியதன் மூலம்,
மார்க்ஸ் உபரி-மதிப்பு உண்மையில் எவ்வாறு உருவாகிறது என்பதை அதன் மிக நுண்ணிய விவரங்களும்
புலப்படும்படி முதன்முதலாய் விவரித்து இந்த நிகழ்முறைக்கு விளக்கமளிக்க முடிந்தது.
முதலாளித்துவ உற்பத்தி முறையும் வர்க்கப் போராட்டமும்:-
முதலாளித்துவ
உற்பத்தி அரங்கில் தொழிலாளர்களின் பொருளாதாரப் போராட்டங்கள் ஏன் எழுகின்றன? அதற்கான
அடிப்படைக் காரணம் என்ன என்பதையும் மார்க்ஸ் தன்னுடைய நூலில் எளிதில் புரியும் வண்ணம்
விளக்கியுள்ளார். உழைப்புச் சந்தையில் ஏனைய சரக்குகளைப்போல் உழைப்புச் சக்தியும் விலைக்கு
வாங்கப்படுகிறது. உழைப்புச் சக்தியை விலைக்கு வாங்கிய முதலாளி தன்னுடைய விருப்பம்போல்
உழைப்பாளியை உற்பத்தியில் ஈடுபடுத்துகிறார். விலைக்கு வாங்கப்பட்ட உழைப்புச் சக்திக்கான
விலையை (கூலி), தொழிலாளி தோராயமாக 6 மணி நேரத்தில் உற்பத்திப் பொருளில் ஈடேற்றம் செய்துவிடுகிறார்.
இத்துடன் தொழிலாளியை முதலாளி விடுவித்து விடுவதில்லை. முதலாளி தொழிலாளியை 6 மணி நேரத்திற்கும்
அதிகமாக ( உம்- 12 மணி நேரம்) வேலை செய்யும்படி நிர்ப்பந்திக்கிறார். இங்குதான் பரிவர்த்தனை
விதி, அதாவது சரக்குகள் அதன் சமதைக்கே பரிவர்த்தனை செய்யப்படுகின்றன என்கிற விதி மீறப்படுகிறது.
உழைப்புச் சக்தியின் உண்மையான விலையாகிய கூலி (6 மணி நேரத்திற்கானது) கொடுக்கப்பட்டு
விட்டதால், தான் பரிவர்த்தனை விதியை மீறவில்லை என்று முதலாளி அடம் பிடிக்கிறார். ஆனால்
உண்மையில் நடப்பதென்ன? தொழிலாளியின் உழைப்பு, அவசிய உழைப்பு நேரத்திற்கும் அதிகமாக
நீட்டிக்கப்படுவதால் சுரண்டப்படுகிறது. இப்படி சுரண்டப்படும் உபரி உழைப்பு, உபரி மதிப்பை
அதாவது லாபத்தை முதலாளிக்கு இலவசமாகப் பெற்றுத் தருகிறது. இத்தகைய வேலை நீட்டிப்பால்
கிடைக்கும் உபரி மதிப்பை மார்க்ஸ் அறுதி உபரி மதிப்பு என்று அழைக்கிறார்.
முதலாளி
வேண்டிய மட்டும் வேலை நேரத்தை நீட்டிக்க முயலுகிறார். பாதிக்கப்பட்ட தொழிலாளி முடிந்தவரை
வேலை நேரத்தைக் குறைக்கப் போராடுகிறார். எனவே முதலாளி வர்க்கத்திற்கு எதிரான முதல்
பொருளாதாரப் போராட்டம் வேலை நேரத்தை மையமாக வைத்துத்தான் நடைபெறுகிறது என்பதை மார்க்ஸ்
தனது நூலில் எடுத்துரைக்கிறார். தொழிலாளர்களின் போராட்டத்தைக் கண்டு அச்சமடையும் முதலாளி
வர்க்கம், புதிய தொழில்நுட்பத்தைப் புகுத்தி அவசிய உழைப்பு நேரத்தை குறைக்க முற்படுகிறது.
புதிய தொழில்நுட்பத்தை புகுத்தியதன் விளைவாய் அவசிய உழைப்பு நேரம் குறைக்கப்பட்டு முதலாளிக்கு
ஒப்பளவில் கூடுதல் உபரி மதிப்பு கிடைக்கிறது. இதனை ஒப்பீட்டு உபரி மதிப்பு என்று மார்க்ஸ்
குறிப்பிடுகிறார். புதிய தொழில்நுட்பம் உழைப்பாளி உயிர் வாழ்வதற்குத் தேவையான அத்தியாவசியப்
பொருள்களின் உற்பத்தியிலும் மாற்றத்தைக் கொண்டுவந்து சேர்க்கிறது. எனவே இங்கும் அவசிய
உழைப்பு நேரம் குறைந்து, அத்தியாவசியப் பொருள்களின் விலை குறைய ஆரம்பிக்கிறது. உபரி-மதிப்பின்
திரள் குறையாமல் தங்களுக்கு கிடைக்க வேண்டும் என்று கணக்கிடும் முதலாளிகள் கூலியை முடிந்தவரை
குறைக்க முற்படுகின்றனர். தற்போது பாதிப்புக்கு உள்ளாகும் தொழிலாளி வர்க்கம் கூலிக்
குறைப்புக்கு எதிரான பொருளாதாரப் போராட்டத்தை கையில் எடுக்கின்றனர். வேலை நேரத்தை நீட்டிப்பதற்கு
எதிரான மற்றும் கூலிக் குறைப்பிற்கு எதிரான பொருளாதாரப் போராட்டங்கள் விரிவான வர்க்கப்
போராட்டங்களாக உருவெடுக்கின்றன. இந்தப் பகைநிலை, வர்க்கப் போராட்டத்தை அரசியல் போராட்டமாக
காலப்போக்கில் மாற்றுகிறது. எட்டு மணிநேர வேலைநாள் உலக அரங்கில் சட்டமாக்கப்படுவதற்குக்
காரணமான நீடித்த தொழிலாளி வர்க்கப் போராட்டத்தை தனது நூலில் மார்க்ஸ் திறம்பட ஆய்வு
செய்துள்ளார்.
நேரவீதக் கூலி மற்றும் பலன்வீதக் கூலி (Time Wages and Piece Wages )
வேலைநேர நீட்டிப்புக்கு
நியாயம் கற்பிக்கும் அடிப்படையிலும், தொழிலாளர்களின் போராட்ட உணர்வை மழுங்கடிக்க வேண்டும்
என்ற எண்ணத்திலும் நேரவீதக் கூலி என்ற கணக்கீட்டை முதலாளி வர்க்கம் சட்டரீதியாயக் கொண்டுவருகிறது.
1 மணி நேர உழைப்பு நேரத்திற்கான கூலியை நிர்ணயித்து தொழிலாளர்களை கூடுதல் நேரம் வேலை
செய்தால் கூடுதல் கூலி என்ற வலையில் சிக்க வைத்தது. மிகுதி நேரவேலை என்பதும் தொழிலாளியை
வரம்பின்றிச் சுரண்டும் பொறியமைவுதான். இப்போது நேரவீதக் கூலியில் மாற்றம் தேவை என்று
தொழிலாளர் வர்க்கம் போராடும்போது, அடுத்த யுத்தியை முதலாளிகள் கையாளுகின்றனர். தற்போது
நேரவீதக் கூலிக்கு மாற்றாக பலன்வீதக் கூலி முறையை உற்பத்தியில் புகுத்துகின்றனர். தொழிலாளர்கள்
தங்களின் விருப்பத்தின் அடிப்படையில் சுரண்டலுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். உள்ளபடியே
பலன்வீதக் கூலி முறைதான் முதலாளித்துவ உற்பத்தி முறையின் அப்பட்டமான படு மோசமான சுரண்டல்
முறை. இன்று நவீன உற்பத்தி முறையில் இத்தகைய பலன்வீதக்கூலி அடிப்படையிலான உற்பத்திச்
சுரண்டல் முறைதான் அனைத்து துறைகளிலும் எந்தவித எதிர்ப்பும் இன்றி அரங்கேறி வருகிறது.
மூலதனத் திரட்டலின் பொது விதி
முதலாளித்துவ
ஆளுகையின் சர்வதேசத் தன்மை மேலும் மேலும் அதிக அளவில் வளர்கிறது. அது இன்று உலக அரங்கில்
ஏகாதிபத்தியமாக வளர்ந்து உழைப்புச் சுரண்டலோடு இயற்கை வளத்தையும் கண்மூடித்தனமாக சுரண்டுகிறது.
எதிர்கால மனித வாழ்வே கேள்விக் குறியாகிவிட்டது. ஆக மார்க்ஸின் ஆய்வு முடிவான சுரண்டலின்
வடிவம் மாறிக்கொண்டே வருகிறது. அதே நேரத்தில் புதிய புதிய சிக்கலுக்கும் முதலாளித்துவம்
ஆளாகி வருகிறது. உலக அரங்கில் ஏகபோகம் வளர்வதைத் தொடர்ந்து துன்பமும், துயரமும், அடிமைத்தனமும்
தொழிலாளிக்குப் பரிசாகக் கிடைக்கின்றன. மூலதனத் திரட்டலைத் தொடர்ந்து மாறும் மூலதனத்தில்
முதலீடு அதிகரித்து மாறா மூலதனமான கூலியில் ஒப்பளவில் மூலதன முன்னீடு குறைந்து செல்கிறது.
இது உழைப்புச் சுரண்டல் வீதத்தை எந்த அடிப்படையிலும் குறைப்பதில்லை. இத்தகைய நிலை உள்ளபடியே
மக்கள்தொகை ஒப்பீட்டு அடிப்படையில் உயர்வதற்கு வகை செய்கிறது. அதாவது குறைந்த கூலிக்கும் உழைப்பதற்கு தயாராக உள்ள
சேமப் பட்டாளத்தை தன் பக்கத்திலேயே நிரந்தரமாக வைத்திருக்கிறது. இதன் காரணாமாய் வக்கற்றோர்
தொகை உயர்வதும், ஏழ்மையின் கடுமையின் காரணமாய் தொழிலாளர்கள் நாடோடிகளாக பிழைப்புத்
தேடி நகரை நோக்கி வருவதும் தொடர்கதையாகிறது.
மிகை உற்பத்தியின் விளைவுகளும், ஏனைய
உழைக்கும் மக்களின் வாங்கும் சக்தி குறைந்து செல்வதும் முதலாளித்துவ வர்க்கத்திற்கு
நெருக்கடியை தோற்றுவிக்கிறது,
மூலதனத்தின்
ஏகபோகம் முதலாளித்துவ வர்க்கத்திற்கே பூட்டிய விலங்காகி விடுகிறது. முதலாளித்துவ மேலோடு
அதற்கு ஒவ்வாததாகி விடுகிறது. முதலாளித்துவ தனியுடைமையில் சாவுமணி ஒலிக்கிறது. உடைமைப்
பறித்தோரின் உடைமை பறிக்கப் படுவதும் சோசலிச உற்பத்திமுறை எழுவதும் வரலாற்றின் வழிப்பட்ட
போக்காக நிச்சயம் நடந்தேறும். ஏனென்றால், மாற்றம் ஒன்றுதான் நிலையானது. மாறிவரும் சூழலில், மனித குலம் சகலவிதமான ஒடுக்குமுறையிலிருந்தும்
விடுதலை பெறும்.