முனைவர்.இரா.பூங்குன்றன்
உதவி இயக்குனர் (ப.நி)
தமிழ்நாடு அரசு,
தொல்லியல் துறை
(முனைவர்.இரா.பூங்குன்றன் நிகழ்த்திய உரையின் காணொளி கீழே கொடுக்கப்பட்டுள்ளது)
வேளிர், வேள் ஆகிய பொருள் பற்றி ஆய்வுகள் நடந்வண்ணம் உள்ளன. வேள் என்பது பற்றி தாம்
யாத்த வேளீர் வரலாற்றில் இராகவஅய்யங்கார் விரிவாக ஆய்வு செய்துள்ளார். இராகவஅய்யங்கார்
காலத்திலேயே இவர் கருத்துக்களை மறுத்து எழுதியவர்களும் உண்டு. இன்று வரை வேளிர் வரலாற்றில்
அய்யங்கார் அவர்களின் கருத்தே போற்றப் பெறுகின்றது. அவர் கருததுப்படி வேளிர்கள் வடக்கிலிருந்து
வந்த யாதவர்கள். அங்கு ஏற்பட்ட ஆரசியல் நெருக்கடியில் குடிபெயர்ந்து தென்னகம் போந்தவர்கள்.
இவ்வேளிர்களே தென்னகத்து வேளாளர்களின் முன்னோடிகள். வேளிர்கள், குடி பெயர்ந்த யாதவர்கள் என்பதற்குப் புறநானூற்றுப் பாடலே (201) அவருக்குச்
சிறந்த சான்றாக அமைந்தது. மேலும் பின்னாளில் தென்னிந்தியாவில் அரசை உருவாக்கி ஆண்ட
அரசர்களும், வடபான்முனிவன் தடவினுள் தோன்றியவர்கள் என்பதை வலியுறுத்த
கதைகளைப் கொள்ளப் பெற்று புராணக் கதைகள் ஒரே மூலத்திலிருந்து உருவாயிற்று என்று கருத
வேண்டியுள்ளது.
அண்மையில் டாக்டர்.செண்பகலட்சுமி அவர்கள் வேளிர்குடிப் பெயர்ச்சியினைத் தொல்லியல் சான்றுகளுடன் வலியுறுத்திப் பேசியுள்ளார். வேளிர்கள்
வடக்கிலிருந்து வந்தவர்கள் என்றும், அவர்கள் கொண்டு வந்ததே பெருங்கல்
சின்னப் பண்பாடு என்றும் கூறுவார். பெருங்கற்
சின்னங்களுக்கும் தமிழகத்தில் வாழ்ந்த புதிய கற்கால மக்களுக்குமிடையில் யாதொரு தொடர்பும் இல்லை என்பது அவர் கருத்து. ஆகையால் பெருங்கற்
சின்னத்தை வெளியிலிருந்து கொண்டு வந்தவர்கள் வேளிர்கள் என்றும் அவர் கூறுவார். மேலும் பெருங்கற்
சின்னத்தைக் கொண்டுவந்தவர்கள் வேளாண்மைத் தொழிலினர் என்றும், ஆகையால் தமிழகத்து
வேளாளர்களின் முனனோடிகள் வேளிரே என்றும் செண்பகலட்சுமி வலியுறுத்துவார். அது மட்டுமின்றி
சங்க
இலக்கியத்தில் கூறப்படும் வேளிர் ஊர்களில் நெல் மிகுந்து காணப்பட்டதால் பேளிர் பெருங்கற் சின்னங்கள், நெல்விளைவு
ஆகியவற்றிற்கிடையில் வரலாற்று ரிதியாக தொடர்புண்டு என்றும் அவர் கருதுகின்றார். இக்கருத்து
வரலாற்றுப் போக்கிற்கு மாறானது என்பதை பின்னர் விளக்குவோம்.
பெருங்கற்சின்னம் தமிழகத்திற்கு வெளியிலிருந்து கொண்டுவரப் பெற்றன. ஆனால் அவை தமிழ் மக்களால்
ஏற்றுக் கொள்ளப் பெற்று மன்னர்களுக்கும், வீரங்காட்டிய
வீரர்களுக்கும் உருவாக்கப் பெற்ற நினைவுச் சின்னங்களாக அமைக்கப் பெற்றன. பெருங்கற்
சின்னங்களில் கிடைக்கும் பானைப் பொறிப்புகள் குறிப்பிட்ட குடியைச் சுட்டுவதற்கு ஆகும் என்பர். பெரும்பாலான
நினைவுச் சின்னங்கள் தம்புகழ் நிறுத்தி மாய்ந்த சான்றோர்களுக்கு ஆகும்.
சங்க கால அகழாய்வு
இன்று
தொடக்க நிலையிலேயே உள்ளது. அதிலும் பெருங்கற்
சின்னங்களில் அகழாய்வு குறிப்பிடத்தக்கதாக இல்லை. அவை முழுமையாக
ஆய்வு
செய்யப்பட்ட பின்பே வேளிர் வரலாற்றுக்கும், பெருங்கற்
சின்னங்களுக்கும் இடையிலிருந்த தொடர்பு புலப்படும். மேலும் வேளிர் தமிழகத் தொல்குடிகளின் வளர்ச்சிப் போக்கில் உருவான தன்மை பற்றி வரையறுத்துக் கூறமுடியும். சங்ககால நகரங்களும்
முழுமையாக அகழ்வு செய்யப் பெறவில்லை. நகர அகழ்வு வேளிர் உருவாக்கத்திற்கான காரணங்களை வரையறுக்க உதவும். வேளிர் தோற்றத்திற்கான சுற்றுச்சூழல் பின்னணியும், பொருளில்
காரணங்களும் அகழ்வுச் சான்றுகள் முதன்மைச் சான்றுகளாக அமையும். சங்க கால அரசியலை மட்டுமின்றி இலக்சியச் செய்திகளையும் விளங்கிக் கொள்ள அகழ்வுச் சான்றுகளே உறுதியான சான்றுகள். தமிழகத்தில் வேளிர் எழுச்சி பெற்றதற்கும் மேனாட்டு வடநாட்டு வாணிக வளர்ச்சிக்கும் கொக்கில் பொன்னை வெட்டியெடுத்தற்கும் இடையில் நெருங்கிய தொடர்பு உண்டு. அந்த தொடர்பினை வலியுறுத்தவும் அகழ்வுச் சான்றுகள் துணைநிற்கும்.
சாசனங்கள்
வேளிர்
பற்றி
குறிப்புகளைத் தந்துளளன. தந்துவருகின்றன. தமிழகத்து முழைஞ்சுகளில் பொறிக்கப் பெற்ற (வேள் அறை நிகம் என்றும், வேண்காசிபன்
(வேள்காசிபன்) என்றும் தமிழ்ப் பிராமிக் கல்வெட்டுகளில் கூறப்பெறுகின்றது. அரிட்டாபட்டியில் உளியன் (வொளியன்) என்று ஒருவன் பெயரைக் கூறும் கல்வெட்டு ஒன்று கிடைத்துள்ளது. இது கி.மு. 2ஆம் நூற்றாண்டினைச் சேர்ந்தது. ஒளியன் என்பது வேளைக் குறிக்கும் இது பற்றி பின்னர் பார்ப்போம்.
கொடுமணலில் நடைபெற்ற அகழ்வாய்வில் இரண்டு பானை ஓடுகளில் வேள் என்று எழுதப் பெற்றிருந்தது. இவை கொடுமணல் வேள் ஆட்சியின் கீழ் இருந்தமையைச் சுட்டுகின்றன எனலாம். மேலும் அங்கு கிடைக்கின்ற பொறிப்புகள் சில வேளிரைக் குற்ப்பதாகலாம் என்று கருதப்பெறுகின்றது.
ஈழத்தில்
கிடைக்கின்ற பிராமிக் கல் வெட்டுகளில் பத்துக்கும் மேற்பட்டவற்றில் வேள் பற்றிய குறிப்புகள் கிடைக்கின்றன. அக்கல்வெட்டுகளில் பெரும்பாலானவை தமிழ்ப்பகுதிகளிலேயே கிடைக்கின்றன. அண்மையில் யாழ்ப்பாணப் பகுதியில் வெளி என்று எழுதப் பெற்ற பானையோடு ஒன்று சிடைத்துள்ளது. ஆகையால் தமிழ்நாட்டில் வேள் ஆட்சி சிறப்புற்றிருந்த காலம் ஒன்றிருந்தது என்று உறுதியாகக் கூறலாம். இது முரண்பட்ட இயல்பு. ஆனால் வேள் என்று கூறப்படாத சிற்றரசர்களைக் கூட வேள் என்று கொள்ளலாம்.
வேள் ஆட்சி ஏற்படுவதற்கு
முன்பு
சில
குடி
ஆட்சி
நடைபெற்றிருக்க வேண்டும். அக்கால சமூக வளர்ச்சியைக் கால அடைவில் வைத்து செய்வதற்கு
அகழ்வுச் சான்றுகளே தெளிவான செய்திகளைத் தரும. அத்தகைய அகழ்வுச் சான்றுகள் குறிப்பிட்ட பாள நிலைகளில் கிடைப்பதால் பொருள் கிடைக்கின்ற பாள நிலையைக் கொண்டு கால அளவு செய்யலாம். ஆனால் அகழாய்வு குறைவாக இருபபதாலும், தொடர்ச்சியும் தெளிவுமற்றதாக இருபபதாலும இச்செய்திகளைக் கொண்டு சங்க கால அரசியல் வ்ரலாற்றினைக் கால அடைவில் வரையறுப்பது கடினமே. இத்தகைய நிலையில் ஒப்பாய்வு முறையைக் பயன்படுத்த வேண்டியுள்ளது.
வேளிர், வேள் என்பதன் பன்மைச் சொல், வேள் என்பதற்கு
பேராசிரியர் இராகவ அய்யங்கார், மொ.அ.துரைஅரங்கசாமி ஆகியோர் பொருள் காண முயன்றுள்ளனர். அய்யங்கார்
கூற்றுப்படி வேள்,
வேளாளர் ஆகிய சொற்கள் வேளாண்மையுடன் தொடர்புடைய
சொற்கள் என்றும்,
வேளிர் வேளாளர்களின் முன்னோடி என்றும் கருதலாம். ஆனால் அரங்கசாமி வேள் என்ற சொல், வெள், வெளிச்சம்
ஆகியவற்றிலிருந்து உருவான சொல் என்று கூறுவார். மேலும்
வேள் என்பது ஒளி என்ற பொருளைத் தந்தது என்று கூறும் அவர் ஆய்வினை மேற்கோள் காட்டுவது
பயனுடையது.
இனி வேள் என்ற சொல்லின் பொருள யாது? வெளியன், வெளிமான்
போன்ற சொற்கள். வேளிர் என்ற சொல்லைப் பற்றி ஆராயும்போது குறிக்கப்பட்டன. ஒளியரே வெளியர்
என்றால் ஒளி வெளி ஒரே பொருளைக் குறிப்பனவாகும். தற்காலத்துப் பேச்சு வழக்கில் வெளிச்சம்
என்னும் சொல் ஒளி என்னும் பொருளிலேயே வழங்குகிறது. வெள்ளை, வெண்மை, வெள்ளி
என்ற சொற்கள் எல்லாம் வெண்மை நிறம் அல்லது ஒளியுடைய என்ற பொருள் தரும் வெள் என்ற அடிச்சொல்லின்
அடியாகப் பிறந்தன எனலாம். வேள் என்ற சொல்லும் இதனடியாகப் பிறந்தது எனக்கொண்டால் அச்சொல்
புகழ்பெற்ற ஒள்ளியராய் விளங்குவோர் என்ற பொருளைத் தருவதாலும அல்லது பழங்கலாத்தில் அரசர்களைப்
பற்றிப் பொதுவாக நிலவிய நம்பிக்கையின்படி வேளிரிடத்துள்ள ஒளி அல்லது கடவுள் தன்மை என்ற
பொருளைத் தருவதாகலாம்.
அரங்கசாமியின் ஆய்வு முடிவுகள் வேள் என்ற சொல்லினி உண்மைப்
பொருளை விளங்கிக் கொள்ளப் பெரிதும் துணை நிற்பது வேள், ஒளி ஆகிய விளக்குவார்.
இளையர் இன முறையர் என்றிகழார் நின்ற
ஒளியோ டொழுகப் படும். (698)
இக்குறளுக்குப் பொருள் அரசரை இளையவர், தமக்கு இன்ன முறையுடையபவர் என்ற அமைதியானது அவரிடத்தில்
உள்ள ஒளியோடு பொருத்த ஒழுக வேண்டும் என்பதே. ஈண்டு பரிமேலழகர் ஒளியானது அரசர் உறங்கா
நிற்கவும் தாம் உலகம் காக்கின்ற அவர் கடவுள் தன்மை என்று கூறுவார்.
பட்டினப்பாலையில் "பல்ஒளியர் பணி பொருங்க" என்று பயின்றுவரும் அடி எடுத்துக் காட்டத்தக்கது. இவ்வடியில்
பல் ஒளியர் என்று கூறுவது வேளிர்களையே எனலாம். வேளிர்க்கு ஒளியர் என்ற சொல்லும் பயன்படுத்தப்
பெற்றமை குறிப்பிடத்தக்கது. வேள், ஒளி ஆகிய சொற்கள்
ஒரு பொருள் நுதலிய சொற்கள். அவை ஒளியையும், தலைவளையும்
குறித்து வந்தன. செந்தமிழ் சேர்ந்த பன்னிரண்டு கொடுந்தமிழ் நாடுகளைப் குறிப்பிடும்
ஒரு பாடலில் வேணாடு என்று கூறப்பெறுகின்றது. அதே செய்தி பற்றி மற்றொரு பாடலில் வேணாடு
என்பதற்குப் பதிலாக ஒளிநாடு எனக் கூறப்பெறுகின்றது.
ஆகையால் வேள், ஒளி ஆகிய
சொற்கள் ஒரு பொருள் நுதலியன எனலாம். மேலும் வேளிரும், ஒளியரும் அவ்வாறே எடுத்துக் கொள்ளத்தக்க பொருளையே தரும்
எனலாம். பண்டியர் செப்பேட்டில் (வேள்விக்குடி செப்பேடு) ஒளிநகர் அழிந்து என்று கூறுவது கூட வேள்நகரை அழித்து
என்றும் பொருள் கொள்ளலாம். இதுவும் ஒளிக்கும், வேளிருக்கும்
இடையிலுள்ள தொடர்பினை உறுதிப்படுததுகின்றது. ஒளிக்கும் வேளுக்கும் இடையில் உள்ள தொடர்பினை
வலியுறுத்த அணமையில் கண்டுபிடிக்கப் பெற்ற தமிழ்ப் பிராமிக் கல்வெட்டு சான்று பகர்கின்றது.
அக்கல்வெட்டில் "நெல்வெலி சழிவன் வொளியன் முழகை செய்பிதோன்" என்று பயின்று வரும். கல்வெட்டில் வரும் ஒளியன் என்ற
சொல் எடுத்துக் காட்டத்தக்கது. தலைவனை வொளியன் என்று கூறுவது, ஒளியன் என்று கூறும் மரபும் உண்டு என்பதை வலியுறுத்துகின்றது.
வடமொழியில் வரும் ராஜா என்ற சொல் வேள் என்ற சொல் உருவான
சமூகப் பின்னணியில் உருவாயிற்று என்பதை அண்மைக்கால ஆய்வுகள் வலியுறுத்துகின்றன. ராஜா
என்ற சொல் ரஜ் என்ற வேர்ச்சொல்லிலிருந்து உருவான சொல் என்பர். மேலும் அந்த வேர்ச்சொல்லினி
விரிந்த பொருளாகத் தலைவன் என்ற பொருள் உருவாகியிருக்க வேண்டும் என்பர்.
வடமொழி ராஜாவைப் போலவே தமிழ்மொழி வேள் என்ற சொல்லும்
உருவாகியிருக்க வேண்டும் என்பதும் ரோமிலாதாபர் கருத்து. இது ஒரு சொல் குறிப்பிட்ட சமூக
அமைப்பில் தோன்றும்போது அச்சொல் அச்சமூக அமைப்பினைப் பிரதிபலிப்பதாக அமையும் என்பதை
உறுதிப்படுத்துகின்றது.
தமிழகத்தில் வேந்தராட்சி (சேர, சோழ, பாண்டியர்) உருவாகி
நிலைபெறுவதற்கு முன் வேள் ஆட்சி உருவாகி நிலைபெற்றது. தொல்குடிகளின் இரத்த உறவினால்
வேள் (குடித்தலைவன்) எழுச்சி பெற்றான். சங்க காலத்திற்கு முன்பே வேளிர் உருவாகிவிட்டனர்.
ஒவ்வொரு தொல்குடிக்கும் ஒரு வேள் இருந்திருக்க வேண்டும். தொல்குடிகளில் இருந்த மக்களுக்கும்
வேளுக்குமிடையிலான உறவு இரத்த உறவின் அடிப்படையில் உறுதிப்பட்டு நின்றது. ஆகோள் பூசலில்தான்
முதலில் வேள் உருவானான். காலப்போக்கில் பூசல் காலங்கள் மட்டுமின்றி அமைதிக் காலங்களில்
வேளாகவே நிலைபெற்றான். குடியாட்சி நிலையிலிருந்து வேள் ஆட்சி நிலைக்கு மாறிய வரலாற்றினைக்
கால அடைவில் வைத்துக் கூறுவது கடினமே. ஆனால் இன்றும் பல்வேறு பழங்குடிச் சமூகங்களில்
வேளிர் உருவாகி வருவதைக் காண்கிறோம். வேளிர் அமைப்பின் படிமுறை வளர்ச்சிக்கான சான்றுகள்
அச்சமூகங்களில் உயிரோட்டத்துடன் இன்றும் நிலைபெற்றுள்ளன. பசிபிக் கடலில் பரந்து விரிந்து
கிடக்கும் தீவுக் கூட்டங்களில் வாழும் பாலினேசிய மக்களிடையில் தொல்குடி அமைப்பு வேள்
ஆட்சி இரண்டுக்கும் இடைப்பட்ட படி நிலைகள் ஆகியவை நிலை பெற்றுள்ளன. அது போலவே கிழக்கு
ஆப்பிரிக்கா
, தென் ஆப்பிரிக்கா ஆகிய பகுதிகளிலும் இந்தச் சமூக
அமைப்புகளைக் காட்டும் நிலைகளைக் காணலாம். இவற்றில் கிடைக்கும் தரவுகளைக் கொண்டு தமிழக
வேள் ஆட்சி எழுச்சி பற்றி ஆய்வு செய்யலாம். பசிபிக் சமுத்திரத்தில் உள்ள தீவுகளில்
வாழும் பாலினேசியர்கள் தங்கள் (தலைவர்) அரசர்களை மன என அழைப்பர். அதற்கு ஒளி, கடவுள் தன்மை என்று பொருள். குஷான மன்னன் கனிஷ்க என்ற
பெயருக்கும் ஒளி,
கடவுள்தன்மை என்ற இரு பொருள்கள் உண்டு. இதுபோல
பல சான்றுகளைக் காட்டிச் சொல்லலாம். குடியில் ஒளிமிக்க ஒருவன் பிற மக்களால் தலைவனாக
ஏற்றுக் கொள்ளப் பெற்றதையே வேள் என்ற சொல் கூறுகின்றது. காலகதியில் வேள் என்பது சிறந்து
நிற்போருக்கு அளிக்கப்பெறும் விருதாக நின்றுவிட்டது. வேளாளரில் மகட்கொடைக்குரியோரைக்
குறிக்கும் போது வேள் எனவும், அரசு எனவும் உரிமையெய்தினோரும்
என்ற நச்சினார்க்கினியர் கூறுவார். ஆகையால் குறிப்பிட்ட குடித்தலைவரை மட்டுமின்றி பிற
தலைவர்களையும் வேள் என்று கூறுவதைக் காண்கின்றோம்.
வேள் என்பதன் பன்மை வேளிர் என்பதாகும். சங்ககாலத் தமிழகத்தில்
வேள். ஆய்வேள்,
அழுத்தூர் வேள், அழும்பில் வேள், மையூர்
கிழான் வேள்மான்,
வெளியன், வேள்மான், பிவூர் வேள்மான், நெடுவேள்
ஆதன், இருங்கோவேன் போன்ற வேளிர் குறிக்கப் பெறுகின்றனர். அகநானூற்றில்
பதினான்கு வேளிர் (135) பதினொரு வேளிரு (246) ஐம்பெரும் வேளிர் எனப்பன்மையிலும் வேளிர்
கூறப்பெறுகின்றனர். வேளிருக்குள்ளும் போர்பூசல் நடைபெற்றன என்பதற்குச் சான்றுகள் கிடைதுள்ளன.
வேளிர்கள் பூசல் தலைவர்கள்.
வேளிர்கள் பல்வேறு குடிகளைச் சேர்ந்தவர்கள். பெருவேள், நெடுவேள், மாவேள்
என்று கூறுவர் வேளிர்க்குள்ளும் அதிகார அடுக்கு உருவாகிவிட்டதையே காட்டுகின்றது. முருகன்
பெருவேள் என்று பெருங்கதையில் குறிக்கப் பெறுகின்றான். வேளிர்களையும், கடவுளரையும் பெருவேள் என்று கூறும் மரபு உருவாகி விட்டதையே
இது காட்டுகின்றது. தமிழ் இலக்கிய மரவின் மகன், பெருமகன், கோ நொடுமான் (நேடு மகன்) நெடுமிடல் போன்ற அடைமொழியும்
சங்ககால அரசியலில் குறிப்பிட்ட வளர்ச்சிக் கட்டங்களையும், குடித்தலைவர்களையும் குறித்தன. குடிப்பெயர்களுடன் மகன், பெருமகன் அடைமொழி பயின்று வரக் காண்கிறோம். அண்டர்மகன்
குறுவழுதி,
அதியர் பெருமகன் போன்ற தலைமை நிலை வேள் ஆட்சி ஏற்படுவதற்கு
முன் உருவான இனக்குழுத் தலைவர்களைக் குறிக்கவில்லை. கால அடைவில் மகன், பெருமகன் இரத்த உறவின் டிப்படையில் அல்லாமல் வேறு தலைவர்களைக்
குறிக்கவும் ஆளப்பெற்றன. இளையர் பெருமகன் (புறம்) என்பன வீரர் கூட்டத்திற்குத் தலைவன்
என்ற பொருளில் ஆளப்பட்டதே அன்றி இனக்குழு தலைவன் என்ற அடிப்படையில் ஆளப்பெறவில்லை.
மகன் என்பது வழிமுறையில் வந்தவன் என்றும் குலத்தோன்றல் என்றும் கொள்ளலாம். மெசபடோமிய
நாகரிகத்திலும் அரசரை பெருமகன் என்று பொருள்படும் சொற்களால் அழைக்கின்றனர்.
உலகம் முழுவதும் குடி ஆட்சியிலிருந்து வேள் ஆட்சிக்கு
மாறும்போது வேள் ஆட்சியைப் புனிதம் என்று கருத வைப்பதற்கும், நிலை நிறுத்துவதற்கும் தொன்மை (மரபுத்தோற்றக் கதைகள்)
படைத்துக கொள்ளப் பெற்றன. தலைவன் ஆட்சியை நியாயப்படுத்துவதற்கும் பிறகுடிகளில் அங்கீகாரம்
பெறுவதற்கும் மரவுத் தோற்றக் கதைகள் (தொன்மை) படைத்துக் கொள்ளப் பெற்றது. மேலும் வேள்
(தலைவன்) கடவுள் சம்பந்தம் உடையவன் என்பதைக் காட்டவும் இக்கதைகள் உருவாக்கப்பெற்றன.
தொன்மை தொல்காப்பியத்தில் ஓர் இலக்கிய வகையாகப் பேசப்படுகின்றது.
குடி மரபுத் தோற்றம் பற்றிய கதைகளைப் படைத்துக கொள்வதற்கும்
இன்றும் பல அத்தியாவசிய காரணங்களும் இருந்தன. நற்குடிப்
பிறப்பு தலைவனுக்கு
(மன்னனுக்கு) படைத்துக் கொள்ளப் பெற்றது. அவனுடைய குடி முன்னோர்கள் வீறார்ந்தவர்கள். வாய்மையின் பால் பற்று கொண்டவர்கள். தியாகசீலர்கள், கடவுட்
தன்மையுடையவர்கள் என்ற கதை கட்டப்பெற்றது. அரியணைக்குரிய
ஆற்றல் உடையவர்கள் என்ற கதை சுட்டப்பெற்றது. அரியணைக்குரிய
குலம் வேளின் குலம் என்பதை வலியுறுத்தவே புராணங்கள் படைத்துக் கொள்ளப் பெற்றன. மேலும் பாண்கடன் ஆற்றும் பெருமை, வழிமுறை (வம்சாவழி) ஆகியவை புராணங்களில் பயின்று வரக் காணலாம். இந்தியப் புராணங்களில் வரும் வம்சானு சரிதம் அரசர்கள்
வரலாற்றை வரிசைப்படுத்தி உரைப்பது ஆகும்.
புகழ்மிக்க குடி மரபு தோற்றம் பற்றிய கதைகள் வேதம் (நாராசம்சிகள்) கதைகள், தானஸ்துதிகள், ஆக்யாணங்கள்
போன்றவற்றில் பொதிந்து கிடக்கின்றன.
இவற்றில் வேளின் குடிப்பிறப்பு வீரம் மானவிறல், கொடை, மடம்படாமை
ஆகியன சிறப்பித்துப் பேசப்படுகின்றன. இக்கதைகள்
ஆரம்பத்தில் பிராகிருத மொழியிலும் பின்னாளில் சூதர்களிடமிருந்து பிராமணர் கைக்கு மாறிய
போது சமஸ்கிரது மொழியிலும் பயின்று வரத்தொடங்கின.
இந்தப் பின்னணியில் வேளிர் பற்றிய தோற்ற மரபுக் கதைகளைப்
பற்றி ஆய்வு செய்ய வேண்டும்.
தென்னிந்தியாவில் பரவியிருந்த பல்வேறு குடிகள்
அரசினை உருவாக்கி ஆளத்தொடங்கிய போது இத்தகைய கதைகள் படைத்துக் கொள்ளப் பெற்றன. பல்லவர், சாளுக்கியர், கதம்பர், கங்கர், இச்சுவாகு, வாடகர், சாலங்காயனர், விஷ்ணு
குண்டியர்,
பாணர், அதியமான்கள், மலையமான்கள், இராட்டிரகூடர், சம்புவரையர், போசளர், விஜயநகர் போன்ற குடியினர் அரசினை உருவாக்கி ஆண்டபோது
குலமரபு தோற்றக் கதைகள் படைத்துக் கொள்ளப் பெற்றன. பின்னாளில் படைத்துக் கொள்ளப் பெற்ற குலமரபு தோற்றக்கதைகள்
சிலவற்றிற்கு கபிலர் புறநானூற்றுப் பாடலே மூலமாக இருந்துள்ளது.
".................. நீயே
வடபான் முனிவன்த டவினூட்டோன்றிசி
செம்பு புனைந்தி யற்றிய சேணெடும்புரிசை
உவராவீகைத்து வரையாண்டு
நாற்பத்தொன்பது வழிமுறை பந்த
வேளிருள் வேளே."
இந்தப்பாடல் வேளிர் எழுச்சியின் போதே வேள்குடித் தோற்றம்
பற்றிய புராணக் கதைகளும் தோன்றி விட்டன என்பதை வலியுறுத்துகின்றது. இந்த இயல்பினை முதல்
முதலில் கண்டு காட்டியவர் டி.என்.சுப்பிரமணியம் ஆவார்.
பொன்றாப்புகழும். நீண்ட வரலாற்றுப் பின்னணியும் வேளிர்
ஆளத்தகுதி உடையவர்கள் என்பதை விலயுறுத்தவே ஆகும். இந்த வகையில் படைக்கப் பெற்ற வேறு
தொன்மைகளையும் எடுத்துக் காட்டலாம். அதியமான்கள் தேவலோகத்திலிருந்து கரும்பினைக் கொண்டு
வந்த கதையும்,
தொடண்டைமான் மாயோன் வழித்தோன்றல் என்றும் கூறும்
கதையும், நல்லியக்கோடன் முருகனின் வழித் தோன்றல் என்றும் கூறப்பெறுவதும், முருகனிடமிருந்து வேலைப் பெற்று மாற்றாரைத் தோற்கடித்தான்
என்ற கதையும் குலமரபுத் தோற்றம் பற்றிய கதைகளுக்குச் சங்கப்பாடல்களில் பயின்று வரும்
சான்றுகள் எனலாம். இன்னும் பல சான்றுகள் உண்டு. இந்த தொன்மையை மானிடவியல் கண்ணோட்டத்தில்
அணுகினால் பல வரலாற்று உண்மைகள் வெளிப்படும்.
வேளிர் எழுச்சி பெற்றமைக்கு ஆகோட் பூசலும் காரணமாகும்.
சங்க காலத்திற்கு முன்பும்,
சங்க காலத்திலும் ஆகோள் பூசல் தொடர்ந்து நடைபெற்றது.
ஆகோள் பூசலில் ஈடுபட்டு வீரங்காட்டிய மறவர் (மழவர்?) களின் தலைவன் வேள் என்று கருதப்பெற்றான். ஆகோள் பூசலில்
தலைமை தாங்கி நடத்திய தலைவன் வேள் என்று அழைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆகோள் பூசலின்போது
பூசல் தலைவர்களைத் தேர்ந்தெடுக்கும் வழககம் ஆபபிரிக்கக் காலநடை வளாப்பவர்களிடையிலும், வேதகால மேய்ப்பர்களிடையிலும் காணப்பட்ட இயல்பாகும். பின்னர்
அமைதிக் காலங்களிலும் அவர்கள் மக்கள் தலைவர்களாக ஏற்றுக் கொள்ளப்பட்டார்கள். உலகம்
முழுவதிலுமுள்ள கால்நடை வளர்ப்புச் சமூகத்தில் க்ணப்பட்ட தலைவர் முறை வேளிர் வரலாற்றிலும்
நிலைபெற்றிருக்க வேண்டும்.
வேளிர் ஆகோள் பூசலின் தொடர்பினை விளங்கிக் கொள்ள செங்கம்-தருமபுரி
நடுகற்களே சிறந்த சான்றுகள். இப்பகுதியில் வேளிர்களே நிறைந்திருந்தார்கள். நன்னன், கங்கன், கட்டி, அதியன், பாணன்
போன்ற தலைவர்கள் இப்பகுதியைச் சார்ந்தவர்கள் என்று கூறப்பெறுகின்றனர். சங்க காலத்திலும்
இப்பகுதியல் நிரைகோடல் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்றிருந்தது. வேளிர்களுக்கிடையில்
முரண்பாடுகளும்,
உடன்பாடுகளும் மாறிமாறியிருந்தன. மேலே கூறப்பெற்ற
நன்னன் வேள் என்ற நிலையில் ஆட்சி செய்திருக்க வேண்டும். அந்த வேளின் கீழ் வாழ்ந்த குடிகள்
ஒரு குறிப்பிட்ட குலத்தினைச் சேர்ந்தவர்கள். அவர்கள் உறவுமுறை இரத்த உறவினால் பிணைக்கப்பட்டிருந்தது.
வேளிருக்கும் வேளாண்மைக்கும் இடையில் உள்ள தொடர்பு பற்றி
சங்க இலக்கியம் கூறுவதாக செண்பகலட்சுமி கூறுவார். பெருங்கற் சின்னத்தினை உருவாக்கியவர்கள்
என்று கூறப்படும் வேளிர் ஊர்களில் நெல் மிகுந்ததிருந்தமை கொண்டு வேளிர் பெருஙகற் சின்னங்கள்.
நெல்விளைவு ஆகியவற்றிற்கிடையில் வரலாற்று ரீதியான தொடர்பு உண்டு என்று அவர் கூறுகூர்.
ஆனால் இச்சான்றுகள் ஒன்றிற்கொன்று தொடாபில்லாதவை. வேளிர்களுக்கும், பெருங்கற்சின்னத்திற்கும் இடையிலான தொடர்பிற்கு வேறு
காரணம் உண்டு.
வேளாண்மைக்கும், வேளிர்க்குமிடையில்
உள்ள தொடர்பு பலபடி நிலைகளைக் கொண்டது. வேளிர்கள் உண்மையில் வேளாண்மையில் ஈடுபட்டது
மிகவும் பிற்பட்ட வரலாறு,
சங்க இலக்கியத்தில் வேளிருடைய ஊர்களில் நெல்விளைச்சல்
மிகுந்திருந்தது என்று கூறுவது கொண்டு வேளிர்களை வேளாளரின் முன்னோர் என்று கருதுவது
பொருத்தமுடையதாக இல்லை.
வேளிர்க்கும் கால்நடை வளர்ப்புச் சமூகத்திற்கும் இடையிலான
தொடர்பு குறிப்பிடத்தக்கது. வேளிர் தொறுப்பூசல் காரணமாக எழுச்சி பெற்ற மழவர் தலைவனாகத்
தொறுபூசலில் ஈடுபட்டனன். தொறுப்பூசல் வீரமிக்க வேளிர்கள் உருவாவதற்குக் காரணமாயிற்று.
இந்த வேளிர்களே பின்னாளில் பல்வேறு தொழில் செய்யும் மக்கள் கூட்டத்திற்குத் தலைவனாக
(வேள்) உருவானபோது பல்வேறு தொழிலில் கிடைத்த வருவாய் வேளிர்க்குக் கிடைத்தன. அவற்றில்
ஒன்று வேளாண் வருவாய் (நெல் போன்றவை) ஆகையால் வேளிர்க்கும் வேளாளர்க்குமிடையிலான தொடர்பு
வேறு கண்ணோட்டத்தில் ஆய்வு செய்யப்பட வேண்டும்.
கால்நடை வளர்ப்புச் சமூகத்தில் உருவான வேளிர்க்கும், வேளாண் மக்களுக்குமிடையில் உள்ள தொடர்பு நட்பு அடிப்படையிலானது.
குடிபெயரும் தன்மையற்ற வேளாண் மக்களுக்கும், போர்வலியையும், குடிபெயரும் தன்மையும் மிக்க வேளிர்க்குமிடையில் நட்பு
அடிப்படையில் உறவு இருந்திருக்க வேண்டும். இந்த வகையில் தொமிலாதாப்பர் முல்லை போர்
மறவர்களுக்கும் (வேளிர்) வேளாண்மை செய்பவர்களுக்குமிடையில் உள்ள நட்பு வாழ்க்கையைப்
பற்றிக் கூறுவதை எடுத்துக கூறலாம். வேதகால ஆரியர்களுக்கும், வேளாண் அரசர்களுக்குமிடையில் உள்ள இணைதிற வாழ்வு குறிப்பிடத்தக்கது.
பதியெழல் அறியா வேளாண்மை மக்களை மாறாமைந்துடைய கால்நடை மறவர்கள் அடக்கி ஆள்வது வரலாற்றில்
புதுமையன்று. வேளாண்மைக்குகந்த பகுதியில் வாழும் வேளாண் மக்கள் நாடோடி கால்நடை மேய்ப்பவாகளுக்கும், வேளாண்மை செய்பவர்களுக்குமிடையில் உள்ள உறவு இணைதிற வாழ்வு
அடிப்படையில் எழுந்தது. கால்நடையாளர்கள் வேளாண்மை செய்வோருக்குப் பாதுகாப்பு அளித்தனர்.
அதற்குக் கைம்மாறாக கால்நடையாளர்கள் அறுவடை செய்த வயலில் கிடைக்கும் வைக்கோலை மாட்டுத
தீவனமாகப் பெறுவர். மைம்மாறாக வேளாண்மை மக்களுக்குக் கால்நடையாளர்கள் (வேளிர்கள்
பாதுகாப்பு அளித்தனர். இந்த இணைதிற வாழ்வே இரு பிரிவினரையும்
ஒத்த பண்புடையவராகக் (ஒதே குழு) காட்சியளிக்கச் செய்தது.
இந்தப் பின்னணியில் வேளிர், வேளாண்மைத் தொடர்பினை அணுக வேண்டும். வேளிர் இல்லங்களில்
நெற்களஞ்சியம் இருந்தது என்று கூறுவது காணிக்கையாக வந்த நெல்லின் குவியலாகும். வேளிரே
உழுது பயிர் செய்ததன்று.
கூடல் வேள்
மதுரைக்குரிய பழைய பெயராகிய கூடல் என்ற பெயர் காலந்தோறும்
வழங்கி வந்ததுள்ளது. அக்கூடலின் வேள் அகுதை என்பவன் பாண்டியருக்கு முன ஆடசி செய்தவன்.
கூடல் முதலில் இவன் முனனோர்கள் ஆதிக்கத்திலும், இவன்
ஆதிக்கத்திலும் நிலை பெற்றிருந்தது. பாண்டியர்கள் கூடல் மீது படையெடுத்தார்கள் ஆகையால்
கூடல் முதலில் வேறு யாருக்கோ உரியதாக இருந்திருக்க வேண்டும். கூடலை ஆண்டவர்கள் பற்றியும்
சங்கப் பாடல்கள் சுட்டுகின்றன. பாண்டியருக்கு முன் ஆவ்வூரை ஆட்சி செய்தவன் அகுதை என்ற
வேள். இந்த உண்மையைப் புறப்பாடல் (347) வலியுறுத்துகின்றது.
"....................................
மறப்போர் அகுதை
குண்டு நீர் வரைப்பின் கூடல் அன்ன
குவை இருங்கூந்தல் வருமுன் சேப்ப"
இப்பாடலில் கூடல் அகுதை ஆட்சியிலிருந்த ஊர் என்பதை வலியுறுத்துகின்றது. இவனும், இவன்
தந்தையும் பரிசிலர்க்கு வரையாது வாங்கிச் சிறப்புப் பெற்றனர் என்பது சங்கப் பாடல்களால்
விளங்குகின்றனது.
அவற்றுள் குறுந்தொகைப் (298) பாடல் ஒன்று விரிவாகப் பேசுசின்றது.
"புன்றலை மடப்பிடி யகவுநர்ப் பெருமகன்
மான்சு வண்மகிழ் அகுதைப் போற்றிக்
காப்புக்கை நிறுத்த பல்வேற் கோசர்
இளங்கட் கமழு நெய்தலஞ்செறுவின்
வளங்கெழு நன்னாடன்ன வென்தோற்" (113)
இப்பாலில் அகுதை கோசர்களுடன் தொடர்புடையவனாகக் கூறப்
பெறுசின்றான்.
யானையை நெறிப்படுத்தும் அகவுநர் தலைவன் என்று கூறுவதும்
எடுத்துக் காட்டத்தக்கது.
இதுவரையில் எடுத்துக்காட்டப் பெற்ற சங்கப்பாடல்களில்
அகுதை யானைகளுடன் தொடர்பு படுததியே பேசப்பெறுகிறான். யானையைக் கொடையாகக் கொடுத்தவனாகவோ அல்லது யானைகளைப் பெறிருப்பவனாகவோ
அவன் வருணிக்கப் பெறுகின்றான். அதனால் அகுதை யானைகள்
மிகுந்த மலைப்பகுதியன் தலைவனாகவும் புகழ்பெற்றிருகக வேண்டும். அதனால் தான் பரிசிலர்களுக்கு யானையை மிகுதியாகக் கொடுத்துள்ளான்
என்று கருத வேண்டியுள்ளது.
அகுதையின் கீழ் கோசர்கள் பணியாற்றியதாகக் கூறப்படுகின்றது. அகுதை வேளிடமிருந்து பாண்டியர்களால் கைப்பற்றப்பட்டமை
ஆகும். அத்தகைய கையகப்படுத்தும் முயற்சியின் விளைவே கூடல். கூடல் பாண்டியர்கள் தோன்றிச் சிறப்பு அடைந்த நகரமன்று. மாறாக வேளிர் நகரமாக பாண்டியர்க்கு முன புகழ் பெற்றது.
பாண்டியர் கூடல் வெற்றி
பாண்டியர்கள் கூடல் மீது படையெடுத்து வென்ற செய்தி சங்கப்பாடலால்
உறுதி பெறுகின்றது.
கூடல் வெற்றியை அகப்பாடல் ஒன்று விரிவாகப் பேசுகின்றது.
".....................
பரப்பிற்
பல்மீன் கொள்பவர் முகந்த விப்பி
நாரரிநறவின் மகிழ் நொடைக்கூட்டும்
பேரிசைக் கொற்கைப் பொருநன் வேண்வேல்
கடும்பகட்டியானை நெடுந்தேர்ச் செழியன்
மலைபுரை நெடுநகர் கூடல் நீடிய மனிதரு கம்பலை போல
அலராகின்றது பலர் வாய்ப்பட்டே" (அகம் 296)
இப்பாடலில் பேரிசைக் கொற்கைப் பொருநன்.. நெடுந்தேர்ச் செழியன் என்று கூறுவது எடுத்துக்காட்டத்
தக்கது. கொற்கைத் தலைவனாக விளங்கும் நெடுந்தேர்ச் செழியன் கூடல்
முற்றுமைகயில் நீண்ட நாட்கள் தங்கியிருந்தான் என்று கூறுவது பாண்டியர்கள் முதலில் கொற்கையில்
ஆடசி செய்தவர்கள் என்பதும,
நாடு பாவும் அல்லது நாடு கண்ணகற்றும் கொள்கையினால்
அவர்கள் கூடல் மீது படையெடுத்துத் தங்களுடையதாக்கிக் கொண்டனர் என்பதும் உறுதி பெறுகின்றது.
பண்டைத் தமிழகத்தில்
அரசு உருவாக்கம் (காணொளி)
சிறப்புரை: முனைவர்.இரா.பூங்குன்றன்