Saturday 5 July 2014

முதல் நிகழ்ச்சி (29.06.2014) “சங்க காலமும் பெருங்கற்காலமும்”- முனைவர் தி.சுப்பிரமணியன்

சமூக ஆய்வு வட்டம் ஏற்பாடு செய்திருந்த முதல் கூட்டம் ”தமிழகத்தில் பழங்கற்கால ஆய்வுகள்” பனுவல் புத்தக அரங்கில் கடந்த 29.06.2014 ஞாயிறன்று வெகு சிறப்பாக நடைபெற்றது. முப்பத்தைந்திற்கும் மேற்பட்டவர்கள் வந்திருந்து அந்தச் சிறிய அரங்கை நிரப்பி நிகழ்ச்சியை கேள்விகள் சிறு விவாதங்கள் வழி சிறப்பித்தார்கள்.


கூட்டத்தை சென்னை தொல்லியல் துறையில் ஆய்வாளராக பணியாற்றி ஓய்வுபெற்ற தோழர் பத்மாவதி ஒழுங்கு செய்திருந்தார். கூட்டத்தின் வரவேற்புரையில் திரு. கிருஷ்ணன் சமூக ஆய்வு வட்டம் என புதிதாக துவங்கப்பட்டுள்ள அமைப்பின் பொதுவான நோக்கங்களை விளக்கிப் பேசினார்.

தயாரிக்கப்பட்ட நிகழ்ச்சி நிரலில் கடைசி நேரத்தில் தவிர்க்க முடியாத மாற்றம் ஏற்பட்டிருந்தது. சிறப்பு பேச்சாளராக அழைக்கப்பட்டிருந்த திருமிகு. துளசிராமன் (முன்னாள் உதவி இயக்குநர், சென்னை தொல்லியல் ஆய்வுத் துறை) அவர்கள் தவிர்க்க முடியாத காரணத்தால் வரமுடியாததை தெரிவித்ததைத் தொடர்ந்து முனைவர் தி.சுப்பிரமணியன் (முன்னாள் உதவி இயக்குநர், சென்னை தொல்லியல் ஆய்வுத் துறை) அவர்களை உடனடியாக தோழர் பத்மாவதி ஏற்பாடு செய்தார். அவர் ”சங்க காலமும் பெருங்கற்காலமும் என்ற தலைப்பில் பவர்பாயின்ட் பிரசன்டேஷனுடன் எளிமையாகவும் சிறப்பாகவும் அனைவரும் புரிந்து கொள்ளும் வண்ணம் மிகச் சிக்கல்வாய்ந்ததும், உயர் ஆய்வுத்துறை சார்ந்ததுமான விசயங்களை விளக்கினார்.



அவர் தனது உரையில், தமிழகம் குறித்த தொல்லியல் ஆய்வுகள் கிழக்கிந்திய கம்பெனியில் இருந்து துவங்குகிறது என்பதையும், அக்காலத்தில் அவர்களுக்கு கிடைத்த பழங்கற்கால தடயங்களை முழுமையான ஆய்வுக்கு உட்படுத்தவில்லை. அவர்கள் அவை வேறெங்கிருந்தோ தமிழகப் பகுதிக்குள் வந்தவையாக இருக்கலாம் என ஒரு கண்ணோட்டத்தை முன்வைத்து மூடிவிட்டார்கள். அதன் பிறகு நேரடி பிரிட்டீஷ் ஆட்சியில் பல வெள்ளையர்களான தொல்லியல் ஆய்வாளர்கள் தமிழகத்தில் மிகச் சிறப்பான தொல்லியல் ஆய்வுகளை மேற்கொண்டனர் எனக் குறிப்பிட்டார்.

சிற்ப்புரையாளர் தான் மேற்கொண்ட கொடுமணல் ஆய்வுகள் குறித்து விரிவாகக் குறிப்பிட்டார். தமிழகத்தில் நடைபெற்ற ஆய்வுகளில் மிகச் சிறப்பானதும், பழங்கற்காலம் துவங்கி தமிழகத்தில் சிறப்புற்று வளர்ந்து வந்த நாகரிகத்தின் எச்சங்கள் மிகத் தெளிவாக கொடுமணலில் கண்டெடுக்கப்பட்டதை ஆதாரங்களுடன் விளக்கினார்.


சங்க இலக்கியங்கள் எவ்வாறு பழங்கற்கால ஆய்வுகளுக்கு பெருதவியாக உள்ளன என்பதையும், சங்கப்பாடல்கள் பலவற்றில் கிடைக்கும் குறி்ப்புகள் எவ்வாறு தமிழக் தொல்லியல் ஆய்வுகளுக்கான அடிப்படைகளாக அமைந்துள்ளன என்பதையும் பாடல்களுடன் விளக்கியது மிகச் சிறப்பாக இருந்தது. குறிப்பாக கடையேழு வள்ளல்களில் ஒருவராக குறிக்கப்படும் அதியமான் சங்கப்பாடல்களில் மன்னனாக அல்லாமல் தலைவனாகக் குறிக்கப்படுகிறான் என்பதையும், ஒரு இனக்குழுத் தலைவனாக இருந்திருக்கலாம் என்பதற்கான பாடல் விளக்கங்களையும் குறிப்பிட்டார் மேலும் அவை கிடைத்த பழங்கற்கால தொல்லியல் ஆதாரங்களை புரிந்து கொள்ள எவ்வாறு பயனுடையதாக இருக்கிறது என்பதை விளக்கினார்.

பழங்கற்கால இடுகாடுகளின் வகைமாதிரிகள் குறித்த புகைப்படங்களை மிக விரிவாக எடுத்துக் காட்டினார். அடர்ந்த காடுகளில் மலைகளின் மேலே இருக்கும் சிறு கற்கோட்டை போன்ற பழங்கற்கால இடுகாடுகளுக்குச் சென்ற தங்களின் கடினமான அனுபவங்களை குறிப்பிட்டார்.



தமிழக தொல்லியல் ஆய்வுகளில் ஏற்பட்டிருக்கும் சுணக்கத்தையும், தொல்லியல் ஆய்வுகள் என்பது எவ்வாறு அதிக செலவுபிடிக்கும் வேலைகள் என்பதையும் குறிப்பிட்டார். மேலும் தொல்லியல் ஆய்வுகளில் தமிழக மக்களின் பங்களிப்பையும், மக்களின் புரிதல் வளர்ச்சியடைய வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தினார்.


தொடர்ந்து ஏற்பாடு செய்யப்பட்ட கேள்வி பதில் பகுதியில், சிந்து சமவெளிக்கும் சங்ககாலத்திற்குமான உறவுகள் குறித்தும், வேதகலாச்சாரத்திற்கும் சங்ககால நாகரீகத்திற்குமான வேறுபாடுகள் குறித்தும், தொழில் பிரிவினைகள் தோன்றுவதற்கும் சாதிப்பிரிவினைகள் தோன்றுவதற்குமான உறவுகள் குறித்தெல்லாம் மிக விரிந்த காலகட்ட இடைவெளிகளிலிருந்தெல்லாம் பல கேள்விகள் கேட்கப்பட்டன.

தொல்லியல் துறையில் தோழர் பத்மாவதியுடன் வேலைபார்த்து பணி ஓய்வு பெற்ற பலரும் வந்திருந்து ஆர்வமுடன் அனைத்துக் கேள்விகளுக்கும் கூட்டாக பதில் கூறினர். மேலும் பார்வையாளர்களுக்கு தொல்லியல் ஆய்வுகள் குறித்து தாங்கள் கடைபிடிக்கும் நெறிமுறைகள் என்ன? என்பதையும் இது போன்ற துறைசார்ந்த ஆய்வாளர்களிடம் கேட்கப்படக்கூடிய கேள்விகள் இவற்றைக் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியங்களையும் வலியுறுத்தினர்.


கூட்டம் தோழர் ஜீவானந்தத்தின் நன்றியுரையுடன் இரவு எட்டரை மணிக்கு திட்டமிட்டபடி நிறைவடைந்தது.

No comments:

Post a Comment